உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆன்லைன் பட்டா வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் குடியிருப்புவாசிகள் அவதி

ஆன்லைன் பட்டா வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் குடியிருப்புவாசிகள் அவதி

உத்திரமேரூர்:வேடபாளையம் பெரியார் நகரில், இலவச வீட்டுமனை பெற்றவர்களுக்கு ஆன்லைன் பட்டா வழங்குவதில் வருவாய் துறையினர் அலட்சியம் காட்டி வருவதால், அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி, வேடபாளையம் பெரியார் நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 1993 முதல் பல்வேறு காலகட்டங்களில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பல்வேறு சமூகங்களுக்கு 82 இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. தற்போது, இந்த வீட்டுமனைகளில் பயனாளிகள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்புவாசிகளுக்கு, 32 ஆண்டுகளாக பட்டா ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில், வேடபாளையம் பெரியார் நகரில் இலவச வீட்டுமனை பெற்று, வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு ஆன்லைன் பட்டா இல்லாததால், அரசுக்கு வரி செலுத்தாமலும், பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியாமலும் சிரமபப்படுகின்றனர். பொதுவாக, தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைகளை வருவாய் துறையினர், 10 நாட்களுக்குள் கிராம கணக்கில் ஏற்ற வேண்டும். பின், வருவாய் துறையினர், ஆதிதிராவிடர் நலத்துறையிடம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை மற்றும் பயனாளிகள் குறித்த தகவல்களை கேட்டு வாங்கி, ஆன்லைனில் பட்டா பதிவேற்றம் செய்வது வழக்கம். உத்திரமேரூர் வருவாய் துறையினர் வேடபாளையம் பெரியார் நகரில் வழங்கப்பட்ட வீட்டுமனை குறித்த விபரங்களை, ஆதிதிராவிடர் நலத்துறையிடம் கேட்டு பெறாமல் உள்ளனர். இது தொடர்பாக வேடபாளையம் பெரியார் நகர் குடியிருப்புவாசிகள், பல்வேறு குறைதீர் முகாம்களில் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உத்திர மேரூர் வருவாய் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, உத்திரமேரூர் பேரூராட்சி, வேடபாளையம் பெரியார் நகரில் வழங்கப்பட்ட 82 இலவச வீட்டுமனை பட்டாக்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வேடபாளையம் பெரியார் நகரில் வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைகளுக்கு, ஆன்லைன் பட்டா வழங்க, குடியிருப்புவாசிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, ஆன்லைன் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி