கான்கிரீட் கால்வாய் அமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை, காந்தி நகர் 2வது தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.திறந்தவெளி மணல் கால்வாய் என்பதால், கால்வாயில் புல் வளர்ந்தும், மண் துகள்களாலும், குப்பை குவியலாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைநீர் முழுமையாக வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, ஓரிக்கை, காந்தி நகர், 2வது தெருவில், மூடி வசதியுடன் கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.