உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அவளூர் ஏரிக்கு பாலாறு நீர்வரத்து துவக்கம்

அவளூர் ஏரிக்கு பாலாறு நீர்வரத்து துவக்கம்

வாலாஜாபாத்: அவளூர் ஏரிக்கான பாலாறு கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. வாலாஜாபாத் அடுத்த அவளூரில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். பெரியநத்தம் பாலாறில் இருந்து, அவளூர் ஏரிக்கு 4 கி.மீ., நீர்வரத்து கால்வாய் உள்ளது. பாலாறில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் இக்கால்வாய் வாயிலாக சென்றடையும் தண்ணீர் அவளூர் மற்றும் தம்மனுார், நெய்க்குப்பம் ஆகிய ஏரிகள் நிரம்ப முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளாக அவளூர் ஏரிக்கான பாலாறு கால்வாய் முறையான பராமரிப்பின்மை காரணமாக துார்ந்து செடிகள் வளர்ந்து இருந்தன. இதனால், பாலாறு தண்ணீர் அவளூர் ஏரிக்கு செல்லாமல் தடைபட்டது. இதனிடையே, பருவமழையையொட்டி கடந்த மாதம் காஞ்சிபுரம் நீர்வளத்துறை சார்பில் அவளூர் ஏரி பாலாறு நீர்வரத்துக் கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பாலாறு நீர்வரத்து காரணமாக பெரியநத்தம் பாலாறில் இருந்து, கால்வாய் வழியாக அவளூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ