குப்பை தொட்டியான நிழற்குடை சீரமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:குப்பை கழிவுகள் வீசி அலங்கோலமாக காணப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2018 - 19ம் ஆண்டு ஒதுக்கீடு செய்த நிதியில் இருக்கை வசதி, டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டது.அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வோரும், சுற்றியுள்ள பகுதியில் வசிப்போரும், பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், நிழற்குடையில் உள்ள மின்விசிறி பழுதடைந்துள்ளது. பயணியர் அமரும் இருக்கை அருகில், சாப்பிட்ட பின் துாக்கி வீசப்பட்ட மந்தாரை இலை தொன்னை, துண்டு பீடி, சிகரெட், பேப்பர் டம்ளர் உள்ளிட்ட குப்பை அகற்றப்படாமல் உள்ளதால், பயணியர் இருக்கையில் அமரமுடியாத நிலை உள்ளது.இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பயணியர் நிழற்குடையை சுத்தம் செய்து, முறையாக பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.