உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாய் கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு மின்நகர் பகுதியினர் சாலை மறியல்

கால்வாய் கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு மின்நகர் பகுதியினர் சாலை மறியல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் நகரில் இருந்து மஞ்சள்நீர் கால்வாயில் இருந்து கொடுக்கப்பட்டிருந்த கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின் நகர் பகுதி மக்கள் மறியல் செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு அருகில் உள்ள கோனேரிக்குப்பம் ஊராட்சியின் ஒரு பகுதியாக மின் நகர் உள்ளது. கிராம ஊராட்சியின் எல்லைக்குள் இந்த பகுதி இருந்தாலும், நகர்ப்புறமாகவே இப்பகுதி காட்சியளிக்கும். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், மாநகராட்சியின் மஞ்சள்நீர் கால்வாயில், மின்நகர் வீடுகளில் இருந்து கழிவுநீர் இணைப்பு பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 40 கோடி ரூபாயில், மஞ்சள்நீர் கால்வாய் புதிதாக சுவர்கள் கட்டும் பணி நடக்கிறது. இதனால், மின் நகர் வீடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டிருந்த கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின்நகர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று மாலை திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல், கழிவுநீர் இணைப்பை துண்டித்ததாக புகார் தெரிவித்தனர். ஆனால், மின்நகர் வீடுகளில் இருந்து மஞ்சள்நீர் கால்வாய்க்கு கொடுக்கப்பட்டிருந்த இணைப்புகளே சட்டவிரோதம் எனவும், விதிமீறி கொடுக்கப்பட்டிருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறியலில் ஈடுபட்டோரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை