கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை முடிக்க புத்தேரி மக்கள் வலியுறுத்தல்
புத்தேரி:மூன்று மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, புத்தேரி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில், கைலாசநாதர் மேட்டு தெருவில் இருந்து, சாலபோகம் செல்லும் சாலை, 3 கி.மீ., நீளம் கொண்ட சாலை ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், சேதமடைந்த சாலையை சீரமைக்க, கடந்த பிப்ரவரி மாதம், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டது. ஆனால், அடுத்த கட்ட பணியை துவக்காமல் மூன்று மாதங்களுக்கு மேலாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், ஜல்லி கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகின்றன. எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் புத்தேரியில், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புத்தேரி - சாலபோகம் இடையிலான சாலை சீரமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இச்சாலை சீரமைக்கப்படும்' என்றார்.