பயன்பாடின்றி வீணாகும் கழிப்பறையை சீரமைக்க செவிலிமேடு மக்கள் வலியுறுத்தல்
செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடில், பயன்பாடின்றி வீணாகும் கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு மேட்டு காலனி பகுதியினருக்காக, ஆறு ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில், பொது கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறை அசுத்தமாகி பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. பராமரிப்பு இல்லாததால், கூரையில் அரசமர செடி வளர்ந்துள்ளதால், கட்டடம் வலுவிழந்து வருகிறது. மேலும், கட்டடத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. பொது கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள், மறைவிடமான திறந்தவெளி பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, செவிலிமேடில் பயன்பாடின்றி வீணாகும் பொது கழிப்பறையை சீரமைத்து, முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலிமேடு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.