உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடல்மங்கலத்தில் மூதாட்டியின் வீட்டை இடித்த வருவாய் துறையினரை கண்டித்து மக்கள் மறியல்

கடல்மங்கலத்தில் மூதாட்டியின் வீட்டை இடித்த வருவாய் துறையினரை கண்டித்து மக்கள் மறியல்

உத்திரமேரூர்:கடல்மங்கலத்தில், மூதாட்டியின் வீட்டை இடித்த வருவாய் துறையினரை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் தாலுகா, கடல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தம்மாள், 70. இவர், அதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில், மந்தவெளி புறம்போக்கு இடத்தில், குடிசை வீடு கட்டி, 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். கைது இந்நிலையில், கடந்த மழையின்போது குடிசை வீடு சேதமடைந்தது. இதனால், அவர் குடிசை வீட்டை அகற்றிவிட்டு சிமென்ட் கல்லால் வீடு கட்டும் பணியை நேற்று துவக்கினார். தகவலறிந்த, உத்திரமேரூர் வருவாய் துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், போலீசாரின் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தால் வீட்டை இடித்து அகற்றினர். அப்போது, வீடு இடிப்பதை தடுக்க முயன்ற மூதாட்டி உள்ளிட்ட ஆறு பேரை, போலீசார் கைது செய்து, உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். எதிர்ப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கடல்மங்கலம் -- மல்லியங்கரணை சாலையில், வருவாய் துறை மற்றும் காவல் துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சு நடத்தி, காவல் நிலையம் அழைத்து சென்ற ஆறு பேரை விடுவித்தனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ