ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு
வாலாஜாபாத், வல்லப்பாக்கத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில், வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கம் கிராம குடியிருப்போர் நல சங்க தலைவர் கேசவன், செயலர் மணிமாறன் ஆகியோர் இணைந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு, 1996 - 97ம் ஆண்டில், 2.5 சென்ட் வீதம், 176 குடும்பத்தினருக்கு 6 ஏக்கர் 40 சென்ட் நிலம் அளவிற்கு மனை பட்டா வழங்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான வரைப்படம் தயாரிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழிந்தும் அவ்வகையான இலவச வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலைப்படி வல்லப்பாக்கத்தில் குடும்பங்கள் கூடுதலாக விருத்தி அடைந்துள்ளது. இதனால், ஏற்கனவே வழங்க திட்டமிட்ட 176 குடும்பங்களுக்கான, 2.5 சென்ட் வீதத்திலான நிலத்தினை இப்பகுதியில் குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கும் வீட்டு மனை பட்டா பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், அரசு மூலம் வழங்குகின்ற கனவு இல்ல திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.