வாலாஜாபாத்தில் குறுங்காடு உருவாக்க 1,000 மரக்கன்றுகள் நடவு
வாலாஜாபாத : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் வளர்ந்து வரும் நகர் பகுதியாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கான போக்குவரத்து வழி தடமாக வாலாஜாபாத் அமைந்துள்ளது.மேலும், வாலாஜாபாத் சுற்றி உள்ள கிராம பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், காற்று மாசு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.எனவே, பசுமையை பாதுகாப்பதோடு மரங்கள் வளர்க்க வேண்டிய சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், வாலாஜாபாத் கால்நடை மருந்தகம் வளாகத்தில் காலியாக உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில், குறுங்காடு உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.இதற்காக அயர்லாந்து ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வாயிலாக, 1,000 மரக்கன்றுகள் பெறப்பட்டு, விதைகள் தன்னார்வ அமைப்பினர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சியினர் இணைந்து, நேற்று முன்தினம் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.குறுங்காடு அமைக்கும் பகுதியில், இலுப்பை, பூவரசன் வேம்பு வில்வம், மகாகனி, புங்கன் உள்ளிட்ட வகையிலான 1,000 மரக்கன்றுகள் மற்றும் சுற்றிலும் பாதுகாப்பு வேலியாக மூங்கில் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.ஆதி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், திரிவேனி அகடாமி பள்ளி மாணவர்கள் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.