சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் நடவாவி கிணறு சேதமாகும் அபாயம்
அய்யங்கார்குளம்: அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில், நடவாவி கிணற்றின் பக்கவாட்டு சுவர் மற்றும் தளத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் கிராமத்தில், விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள தெப்ப குளத்தின் அருகில், நடவாவி கிணறு உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்டு மண்டபம் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்படும். பல்வேறு சிறப்பு வாய்ந்த நடவாவி கிணற்றை தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.இந்நிலையில், கிணற்றின் பக்கவாட்டு சுவர் மற்றும் தளத்தில் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்களால் நாளடைவில் கிணறு இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே, கிணற்றின் பக்கவாட்டு சுவர் மற்றும் தளத்தில் வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்றி, முறையாக பராமரிக்க ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.