உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கத்தியுடன் திரியும் மாணவர்கள்; காண்காணிப்பதில் போலீசார் அலட்சியம்

கத்தியுடன் திரியும் மாணவர்கள்; காண்காணிப்பதில் போலீசார் அலட்சியம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இயங்கும் கல்லுாரிகளில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு, தினமும் பேருந்துக்காக கும்பலாக வந்து செல்வது வழக்கம்.அவ்வாறு வரும்போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், கத்தியை காட்டி ஒருவரையொருவர் மிரட்டுவது வாடிக்கையாக உள்ளது.இதனால், அங்குள்ள பயணியர் அச்சமடைந்து உள்ளனர். இரு நாட்களுக்கு முன், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் கல்லுாரி மாணவர்கள் ஒருவரையொருவர், கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின், அங்கு பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவர்களிடம், போலீசார் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளனவா என, சோதனை செய்தனர்.தொடர்ந்து, மாணவர்களிடம் ஏதும் இல்லாததால், அவர்களை போலீசார் அனுப்பி விட்டனர். பொது இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட, போதுமான போலீசார் இல்லாததே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக உள்ளதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, உத்திரமேரூர் காவல் நிலையத்தில், காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் உட்பட காவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மேலும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் பேருந்து நிலையம், காஞ்சிபுரம் சாலை, எண்டத்துார் சாலை ஆகிய பகுதிகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.- சங்கர் கணேஷ், டி.எஸ்.பி.,காஞ்சிபுரம்.

'சிசிடிவி' கேமரா சேதம் போலீசார் திணறல்

உத்திரமேரூர் பேரூராட்சியில் வைக்கப்பட்டுள்ள 65 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. இதனால், அங்கு நடைபெறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதில், போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.கடந்த மாதம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த செங்கல்பட்டு அரசு பேருந்தில் 'டிக்கெட் மிஷின்' திருடுபோனது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை