ஊராட்சி பொது பயன்பாடு இடங்கள் ஆக்கிரமிப்பு அரசியல்வாதிகள், சமூக விரோத கும்பல் அட்டூழியம்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி நிர்வாகங்கள் பெயரில் உள்ள, 'ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டு இடங்களை, அரசியல்வாதிகள், சமூக விரோத கும்பலுடன் கைகோர்த்து ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு பணிபுரிவோர் மற்றும் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள், வீட்டு மனைகள் வாங்கத் துவங்கினர். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் வாங்கி, வீட்டுமனைகளாக பிரித்து, உரிய அங்கீகாரம் பெற்று விற்பனை செய்தன. அப்போது, மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா உள்ளிட்டவை அமைக்க, ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டிற்கான இடத்தை ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு, தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஒதுக்கினர். இந்த நிலங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு பட்டா மாற்றம் செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதிகள், சமூக விரோத கும்பல் ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், பொது பயன்பாட்டில் உள்ள நிலங்களை வருவாய் துறை, வட்டார வளர்ச்சித்துறை இணைந்து, 2022ம் ஆண்டு சிறப்புக் கூட்டம் நடத்தி, பட்டா மாற்றம் செய்தன. அதன் பிறகும், பொது பயன்பாட்டு நிலங்களை பட்டா மாற்றம் செய்வதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதை பயன்படுத்தி தற்போது, பொது பயன்பாட்டில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, சமூக விரோத கும்பல் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட வீட்டுமனை பகுதிகளில், பொது பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 875 பொது பயன்பாட்டு இடங்களுக்கு மட்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில், புல எண் 96/105ல் வீட்டுமனை ஏற்படுத்திய போது, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு, 1990ம் ஆண்டு 20 சென்ட் பொது பயன்பாட்டு இடம் வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டு, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம் பெயரில், இந்த இடம் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இங்கு, தெற்கு வேங்கடமங்கலம் ஊராட்சி சார்பில், அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மீறி, கடந்த 10ம் தேதி, அறிவிப்பு பலகையை மர்ம கும்பல் அகற்றி, இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என, தெற்கு வேங்கடமங்கலம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், கலெக்டர் சினேகாவிடம் நேற்று மனு அளித்தனர். இந்த மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, வண்டலுார் தாசில்தாருக்கு கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க, பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை, சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும். அந்த இடங்களில் பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்த ஓ.எஸ்.ஆர்., நிலத்தை, உள்ளாட்சி நிர்வாகங்கள் பெயரில் பட்டா மாற்ற வேண்டும். அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்யாததால், இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. அரசுக்கு ஒதுக்கிய இடங்களை பாதுகாப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். அரசு இடங்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.ஏ.தமிழ்ச்செல்வன், சமூக ஆர்வலர், செங்கை
நிர்வாகம் அலட்சியம்
வேங்கடமங்கலம் கிராமத்தில், 1983ம் ஆண்டு 56 ஏக்கரில் வீட்டுமனை பிரிவை தனியார் நிறுவனம் ஏற்படுத்தியது. இந்நிறுவனம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கிய இடத்தை பட்டா பெயர் மாற்றம் செய்யாமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சிய மாக உள்ளது.