மின் தடை: கிராம சபையில் கொதிப்பு வெயில் காலம் என சமாளித்த அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிலாளர் தினத்தையொட்டி, ஐந்து ஒன்றிங்களிலும், 274 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கிராம ஊராட்சியின் வரவு - செலவு கணக்கு, கிராம சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் அந்தந்த ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.குன்றத்துார் ஒன்றியம், பரணிபுத்துார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு ஆகியோர் பங்கேற்றனர்.ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், 'தங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது' என்றனர்.அதற்கு அமைச்சர் அன்பரசன், 'வெயில் காலம் என்பதால் அனைவரது வீட்டிலும் ஒரே நேரத்தில், 'ஏசி' போடுவதால் மின் தடை ஏற்படுகிறது. மின் தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி ஊராட்சியில், தலைவர் சரிதா தலைமையில் நடந்த கூட்டத்தில், கனவு இல்லம் கட்டி வரும் பகுதிக்கு சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியை குறிக்கும் காலனி என்கிற பெயர் நீக்கம் செய்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் பொன்மொழி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா, பி.டி.ஓ.,க்கள் பானுமதி, சூரியா, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊராட்சியில் குடிநீர், சாலை, சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.அங்கம்பாக்கத்தில், ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் நடந்த கூட்டத்தில், கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு புதிய சாலை வசதி ஏற்படுத்துதல், அமுதவல்லி நகர் வரை தார்ச்சாலை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.தொள்ளாழி ஊராட்சியில், ஊராட்சி தலைவர் அசினாபேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், வாரணவாசியில் இருந்து உள்ளாவூர் வரையிலான 10 கி.மீ., துாரம் கொண்ட சாலையை அகலப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஊத்துக்காடு ஊராட்சியில் தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட 30 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், கடந்த ஆண்டுகளில் முறைகேடாக சிலருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதாகவும், நிலத்தை திரும்ப கிராம நில கணக்கில் செலுத்த நடவடிக்கை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.களக்காட்டூரில், ஊராட்சி தலைவர் நளினி தலைமையில் நடந்த கூட்டத்தில், வேடல் கிராமத்தினர் மும்முனை இணைப்பு வழங்க வேண்டியும், குருவிமலை கிராமத்தில் முருகன் கோவில் தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்தவும் கிராமத்தினர் மனு அளித்தனர்.அவளூரில், ஊராட்சி தலைவர் சித்ரா தலைமையில் நடந்த கூட்டத்தில், பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவை அகற்ற வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், தலைவர் சுமதி தலைமையில் நடந்த கூட்டத்தில், வைப்பூர் கிராமத்தில் சிறுவர்கள் பூங்கா, அங்கன்வாடி, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.வைப்பூர் சித்தேரியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கால்நடைகள் வெகுவாக பாதிப்படைவதாக மக்கள் தெரிவித்தனர்.
13வது முறை தீர்மானம்
பரந்துாரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதை எதிர்த்து, ஏகனாபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். கூட்டத்தில், பரந்துார் விமான நிலையத்தால் பறிபோகும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஏகனாபுரம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 13வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. --- நமது நிருபர் குழு -