தலைமையாசிரியர் கழகத்தினர் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமையில், நேற்று, கறுப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், ஓராண்டு காலமாக அடிப்படை காரணங்கள் ஏதுமின்றி பள்ளியில் எந்தப் பிரச்னை வந்தாலும், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை பள்ளி கல்வித் துறையானது பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், கல்வி மேலாண்மை தகவல் மைய செயலியில் மாணவர் நலன் சார்ந்த விபரங்களைப் பதிவு செய்ய தனி அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் துாய்மைக் காவலர்களையும் துப்புரவுப் பணியாளர்களையும் உடனே நியமனம் செய்ய வேண்டும்.மருத்துவர்களுக்குப் பணி பாதுகாப்புச் சட்டம் இருப்பது போல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில பொதுச் செயலர் எழிலரசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலர் பொய்யாமொழி வரவேற்றார்.மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.இதில், காஞ்சிபுரம் கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், நிதியுதவி நாடும் பள்ளி பொறுப்பாளர்கள், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.