உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு நிலங்களை காப்பதில்...சிக்கல்: யானை பசிக்கு சோளபொறி போலஅரசு வழங்கிய நிதி உள்ளது

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு நிலங்களை காப்பதில்...சிக்கல்: யானை பசிக்கு சோளபொறி போலஅரசு வழங்கிய நிதி உள்ளது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், விலை மதிப்புக்க அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க வழங்கப்பட்ட, 2.25 கோடி ரூபாய் மதிப்பில், 40 இடங்களில், 66.7 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் வேலி அமைக்க முடிந்துள்ளது. கூடுதல் நிதி வழங்காததால், விலை உயர்ந்த அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளால் கபளீகரம் செய்யப்படும் அபாயம் உள்ளது.தமிழகத்தில் நீர்நிலை மற்றும் அரசு நிலங்கள் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை வருவாய் துறையினர் சிறுக, சிறுக மீட்கின்றனர். இருப்பினும், அதே நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. மேலும், நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள விலை மதிப்பு மிக்க அரசு நிலங்கள் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, கடந்த 2022 ல், சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர், அரசு நிலங்களை மீட்டு பாதுகாக்க, சிறப்பு நிதியாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுதும், 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும், நிதி பங்கீடு செய்து வழங்கப்பட்டன.இந்த சிறப்பு நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, வருவாய் துறை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் துறையினருக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து தாலுகாக்களில் உள்ள விலை மதிப்புமிக்க அரசு நிலங்களை பாதுகாக்க, 2022-- --- 23 ம் நிதியாண்டில் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 34 இடங்களில் வேலி அமைக்கப்பட்டன. இதையடுத்து, 2023-- 24 ம் நிதியாண்டில், 75 லட்ச ரூபாய் மதிப்பில், 6 இடங்களில் பென்சிங் போடப்பட்டது. மொத்தம், 66.7 ஏக்கர் அரசு நிலங்கள் இந்த நிதி மூலம், பென்சிங் போடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல நுாறு ஏக்கர் அரசு நிலங்கள் விலை மதிப்பு மிக்கதாக, பாதுகாப்பு இன்றி உள்ள நிலையில், வெறும் 2.25 கோடி ரூபாய் மட்டும் அரசு ஒதுக்கியதால், 40 இடங்களில் மட்டுமே வருவாய் துறையினர் பென்சிங் போட முடந்தது. குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் போன்ற சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு பிடியிலும், ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய அபாய கட்டத்திலும் உள்ளன. விலை உயர்ந்த அரசு நிலங்களை பாதுகாக்க கூடுதல் நிதி கேட்டிருப்பதாக, அப்போதைய கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். ஆனால், கூடுதல் நிதி இதுவரை கிடைக்கவில்லை.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில், 663 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலங்களும், 1,113 ஏக்கர் பிற வகையான அரசு நிலங்கள் என, மொத்தம், 1,776 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்டெடுக்க வேண்டிய தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர்கள் வேடிக்கை பார்ப்பதால், அரசு நிலங்கள் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படுகின்றன.அரசு வழங்கிய சிறப்பு நிதி, மிக குறைவு என்பதால், போதிய அரசு நிலங்களை பாதுாக்க முடியாத சூழல் நிலவுவதாக வருவாய் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர். சிறப்பு நிதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்கினால், விலை மதிப்பு மிக்க அரசு நிலங்களை பாதுகாக்க முடியும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.இத்திட்டம் பற்றி வருவாய் துறையினர் கூறியதாவது :இத்திட்டம் கீழ், அனாதீனம், நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வரும் உபரி நிலங்கள், நத்தம் காலியிடங்கள், நீர்நிலைகளான குளம், குட்டை, மேயய்க்கால் நிலங்கள் போன்ற நிலங்களுக்கு பென்சிங் அமைக்கலாம். அதேபோல், களம் புறம்போக்கு, புஞ்சை தரிசு, நஞ்சை தரிசு, மந்தைவெளி, பூமிதானம் போன்ற நிலங்களும் பென்சிங் அமைக்கலாம். ஆனால், கோவில்களின் பட்டா நிலங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் ஆகியவற்றின் நிலங்கள் அந்தந்த நிறுவனங்களின் நிதியின் மூலம் பாதுகாக்க வேண்டும் என, துறை மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.விலை மதிப்புமிக்க அரசு நிலங்களை பாதுகாக்க, அரசு தான் நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே இரு தவனையாக நிதி வழங்கப்பட்டன. அரசு எடுக்கும் முடிவை பொறுத்தது. கூடுதல் நிதியை அரசு ஒதுக்கினால், பென்சிங் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை