உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பொது கழிப்பறை

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பொது கழிப்பறை

பெரியநத்தம்:காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமம், பொன்னியம்மன் கோவில் எதிரில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராமத்தினரின் வசதிக்காக, 'ஸ்வச் பாரத் மிஷன் கிராமின்', மாவட்ட ஊராட்சி மற்றும் 2022- - 23ம் நிதியாண்டு, 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 7.85 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்து ஆறு மாதமாகியும், கழிப்பறை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும், கட்டடமும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, பெரிய நத்தம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:பெரியநத்தம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடத்தை, மாவட்ட பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வு செய்தபின், அடுத்த வாரத்தில் கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !