உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உள்ளூர் ஆட்டோக்களில் க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்

உள்ளூர் ஆட்டோக்களில் க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில், க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களின் ஆவணங்களை கண்டறிய க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறை போக்குவரத்து துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா எனவும், காஞ்சிபுரம் நகர எல்லைக்குள் அனுமதி பெற்ற வாகனம் தானா எனவும் கண்டறிய பயன்படுகிறது. மேலும், க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர் இல்லாத ஆட்டோக்களை, ஆவணங்கள் நடப்பில் இல்லாத வாகனமாக கருதி மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் போக்கு வரத்து போலீசாரால், விரைவாக ஆய்வு செய்ய இந்த நடைமுறை உதவும். மேலும், மகளிர் பயணத் திற்கும் பாதுகாப்பானதாக அமையும். க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர் உள்ள வாகனம் மட்டுமே காஞ்சிபுரம் நகர எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவிக்கிறது. அதன்படி, காஞ்சிபுரத்தில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களிலும், க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !