உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிடங்கு வசதியில்லாத ரயில்வே கூட்ஸ் ஷெட்; டன் கணக்கில் பொருட்கள் வீணாகும் அவலம்

கிடங்கு வசதியில்லாத ரயில்வே கூட்ஸ் ஷெட்; டன் கணக்கில் பொருட்கள் வீணாகும் அவலம்

சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டையில் 144 ஏக்கர் பரப்பில் ரயில்வே சரக்கு போக்குவரத்து முனையம் உள்ளது. இங்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கோதுமை, அரிசி, சோளம், சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.இங்கிருந்து, பல்வேறு இடங்களுக்கு, வணிகர்கள் எடுத்து செல்கின்றனர். கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி தந்தும், அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை என, வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பெரியளவில் சரக்குகளை கையாள கொருக்குப்பேட்டை ரயில்வே சரக்கு போக்குவரத்து முனையம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் என விதி உள்ளது.ஆனால், ரயில் பெட்டியில் சரக்குகள் வந்தால் ஒன்பது மணி நேரத்திற்குள் சரக்குகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெட்டிக்கு 150 ரூபாய் என, 6,300 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மழைக்காலம், லாரி பற்றாக்குறை, சுமை துாக்கும் தொழிலாளர்கள் கிடைக்காத காரணங்களால், சரக்குகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், லட்சக்கணக்கான ரூபாய் வணிகர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. டி.சி., கட்டணம், 2 நாட்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பாக பொருட்களை இறக்கி வைக்க கிடங்கு வசதி இல்லை. அதேநேரம், ரயில் பெட்டியில் பாதுகாத்து வைக்க இரண்டு நாட்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே வணிகர்கள், ஆலை உரிமையாளர்கள் நலன் கருதி, உணவு பொருட்கள் இறக்கி வைக்க கிடங்கு வசதி உடனடியாக மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து தமிழ்நாடு கூட்ஸ் செட் தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு பொதுச்செயலர் எஸ்.சார்லஸ் கூறியதாவது:இங்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வறைகள் என, அடிப்படை வசதிகள் இல்லை. இவர்களின் உடைமைகள் அடிக்கடி திருட்டு போகும் நிலைமை உள்ளது.போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால், பெண்கள் இரவில் கூட்ஸ் செட்டில் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் செட் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், 10க்கும் உட்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐந்து பேர், மாற்று பணியாக பேசின்பாலம் ரயில் நிலையம் சென்று விடுகின்றனர். இதனால் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதில்லை.இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்களை வெட்டி, பணம், மொபைல் போன்கள் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அசாம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ரயில் மூலம் கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு, ஆடைகள், மோட்டார் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை பார்சல் சேவைகள் செய்யப்படுகின்றன.மேற்கண்ட பார்சல்களும் மர்ம நபர்களால் திருட்டு போகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

'லாரி பார்க்கிங் வசதி வேண்டும்'

இது குறித்து லாரி ஓட்டுனர்கள் கூறியதாவது:வெளி மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து சரக்குகள், ஏற்றுமதி, இறக்குமதி செய்ய, ஒரு 'ரேக்' எனும் 42 ரயில் பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதில், 21 பெட்டிகளில் மட்டுமே சரக்கு ஏற்றி வரப்படும். அவற்றில் உள்ள சரக்குகளை எடுத்து செல்ல, 120 லாரிகள் வரை தேவைப்படுகிறது.லாரிகளை ஐந்து மணி நேரத்திற்கு மேல் நிறுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மேலும், வெளி இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. இதனால், லாரிகளில் சரக்குகளை எடுப்பதில் வியாபாரிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை