மழையால் சேதமான சாலை சீரமைப்பு
காஞ்சிபுரம்: மழையால் சேதமான காஞ்சிபுரம் காந்தி சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று சீரமைத்தனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம், உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்தி சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கடந்த வாரம் பெய்த மழையின்போது ஆங்காங்கே மண் அரிப்பால் சாலை சேதமடைந்து இருந்தது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேதமடைந்த சாலை 'பேட்ச் ஒர்க்' பணியாக தார்கலவை மூலம் நேற்று சீரமைக்கப்பட்டது.