பெண்ணிடம் பாலியல் சீண்டல் ரேபிடோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு
சென்னை, திருவான்மியூர், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பெண் ஐ.டி., ஊழியர், கடந்த 5ம் தேதி, காய்கறி வாங்க திருவான்மியூர், சீனிவாசா நகர் பிரதான சாலையில் நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்து திருவான்மியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.இதில், வெட்டுவாங்கேணி, கற்பகவிநாயகர் நகரைச் சேர்ந்த திருமலை, 21, என்ற இளைஞர், சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது.'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டுநராக பணி புரியும் இவரை, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், நேற்று போலீசார் கைது செய்தனர்.அப்போது, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற திருமலை, தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.