நகை கடனுக்கு வட்டி செலுத்தி புதுப்பிப்பு தனியார் வங்கி செயல்பாட்டால் நிம்மதி
காஞ்சிபுரம்:அசல் தொகையை புரட்ட முடியாமல், வட்டியை மட்டும் செலுத்தி, தனியார் வங்கிகளில் நகை கடனை பலரும் புதுப்பித்து வருவதால், வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.வங்கி நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர், 2024 செப்டம்பர் மாதம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தார். அடமானம்
அதில், வட்டியுடன் அசல் தொகையை முழுமையாக செலுத்தி நகைகளை மீட்க வேண்டும் என்றும், மறுநாள் மறு அடமானம் வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இதனால் வங்ககளில் நகை அடமான கடன் பெற்றவர்கள் முழுத்தொகையையும் செலுத்தி, நகைகளை திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முந்தைய நடைமுறையில், வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் வசதி இருந்தது.இந்த சுற்றறிக்கை மூலம், வட்டி, அசல் ஆகியவற்றை மொத்தமாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சாமானியர்கள், தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் பலவற்றில், நகைக் கடன் பெற்றவர்கள், வங்கி ஊழியர்களிடம் தங்களது நகைகளை வட்டி மட்டும் பெற்றுக்கொண்டு புதுப்பித்து தர வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஆக்சிஸ், கரூர் வைஸ்யா பேங்க் உள்ளிட்ட தனியார் வங்கிகள், நகை கடனில் வட்டியை முழுமையாக பெற்று, கடனை புதுப்பித்து தருகின்றன. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துஉள்ளனர். இரு வேறு நடைமுறை
தனியார் வங்கிகளில் ஒரு நடைமுறையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அசல், வட்டி என, முழு தொகையும் செலுத்தும் நடைமுறை என இரு வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தனியார் வங்கிகளில் அவர்களது கொள்கைக்கு ஏற்ற வகையில், வங்கி நிர்வாகம் செயல்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.