தேனம்பாக்கம் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுது
காஞ்சிபுரம்:மத்திய அரசின், 'அம்ரூட்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சி, தேனம்பாக்கம் விஷ்ணு நகரில், பொழுதுபோக்கு பூங்கா, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள சிமென்ட் கல் பதித்த நடைபாதை, அமர்வதற்கு இருக்கை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்ள், அழகிய புல்தரை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, கழிப்பறை என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.தேனம்பாக்கம் விஷ்ணு நகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிவாசிகள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால், சிமென்ட் கல் பதித்த நடைபாதையில் புல் முளைத்துள்ளது.அழகுக்காக செடிகள் நடப்பட்ட பகுதியில் களைச்செடிகள் புதர்போல மண்டியுள்ளன. விளையாட்டு உபகரணங்களும், மின்விளக்குகளும் பழுதடைந்துள்ளதால், பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே, லட்சக்கணக்கான ரூபாய் செலவில், அமைக்கப்பட்ட விஷ்ணு நகர் பூங்காவை சீரமைப்பதோடு, முறையாக பராமரிக்க ஊழியர்களை நியமிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.