உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வளையக்கரணையில் பழங்குடியின மக்களுக்கு சாலை, ஆழ்துளை கிணறு ஏற்படுத்த கோரிக்கை

வளையக்கரணையில் பழங்குடியின மக்களுக்கு சாலை, ஆழ்துளை கிணறு ஏற்படுத்த கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்: வளையக்கரணையில், பழங்குடியின மக்களுக்கு சாலை, ஆழ்துளை கிணறு, சிறுபாலம் உள்ளிட்டவை ஏற்படுத்தி தர வேண்டும் என, ஊராட்சி தலைவர் ராஜன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரிடம் கோரிக்கை விடுத்து உள்ளார். குன்றத்துார் ஒன்றியம், வளையக்கரணை ஊராட்சிக்குட்பட்ட மதுரா புதுக்கோட்டை பகுதியில் 12 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடு இல்லாத மக்களுக்கு மத்திய அரசின், பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பி.எம்., ஜன்மன் திட்டத்தின் கீழ், இங்குள்ள பழங்குடின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கனவே ஏழு வீடுகள் கட்டப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள ஐந்து குடும்பங்களுக்கு 5 லட்சத்து 7,000 ரூபாய் மதிப்பில், ஐந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணி விபரங்களை கேட்டறிந்து, விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து, மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், வளையக்கரணை ஊராட்சியில் 120 மரக்கன்று நடும் பணியினை திட்ட இயக்குநர் துவங்கி வைத்தார். மேலும், மதுரா புதுக் கோட்டையில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் குடியிருப்பிற்கு செல்ல, சிறுபாலம், சாலை வசதி, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என, திட்ட இயக்குநரிடம், வளையக்கரணை ஊராட்சி தலைவர் ராஜன் கோரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை