ஆதவப்பாக்கத்தில் குரங்குகள் தொல்லை பிடித்து வெளியேற்ற வனத்துறைக்கு கோரிக்கை
உத்திரமேரூர்:ஆதவப்பாக்கம், வெங்கச்சேரி பகுதிகளில் தொல்லை தரும் குரங்குகளை பிடித்து வெளியேற்ற, வனத்துறையினருக்கு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, ஆதவப்பாக்கம் மற்றும் வெங்கச்சேரி கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி மக்கள் விளை நிலங்கள் மற்றும் வீடுகளின் பின்பக்கத்தில் காய், கனி தரக்கூடிய மரங்களை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில், ஓராண்டாக 60க்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளன. கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரியும் குரங்குகள், அவ்வழியே செல்லும் மக்களை, துாரத்தியும், அச்சுறுத்தியும் வருகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள காய், கனி தரக்கூடிய மரங்களை குரங்குகள் சேதப்படுத்துவதோடு, வீடுகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள், தானியங்கள், பழங்கள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றன. எனவே, ஆதவப்பாக்கம், வெங்கச்சேரி பகுதிகளில் தொல்லை தரும், குரங்குகளை பிடித்து வெளியேற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.