குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டுகோள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பழைய காலனி அருகில், குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக ஓரிக்கை, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை பழைய காலனி அருகில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமான இச்சாலையில், பாலத்தின் அகலம் குறுகலாக உள்ளது. இதனால், சிறுபாலத்தை ஒட்டியுள்ள பழைய காலனிக்கு செல்லும் சாலை வளைவில் வாகனங்கள் திரும்பும்போது, இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பழைய காலனி அருகில் உள்ள சிறுபாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.