பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த மின் நகரினர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தாததால், இப்பகுதியில் உள்ள பலரது வீட்டு உபயோக கழிவுநீர், குழாய் வாயிலாக, காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாயில் விடப்பட்டது.இந்நிலையில், மஞ்சள்நீர் கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுவதால், கால்வாயில் கழிவுநீர் விட தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், மின்நகரில் உள்ள கால்வாயில் தேங்கும் கழிவுநீர் வெளியேற வழியின்றி, 3வது தெருவில், மழைநீருடன் வீட்டு உபயோக கழிவுநீர் கலந்து சாலையில் குளம்போல தேங்கி உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது..எனவே, மின் நகர் தெருவில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை முழுமையாக அகற்றவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.