தெருவில் தேங்கிய மழைநீரால் காட்டுப்பாக்கம் கிராம மக்கள் அவதி
உத்திரமேரூர்:காட்டுப்பாக்கம் பள்ளத்தெருவில் மழைநீர் தேங்கி உள்ளதால் கிராம மக்கள் அவதிப் படுகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்தில் காட்டுப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, தெருக்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்குள்ள பள்ளத்தெருவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை அருகிலுள்ள சாலையின் உயரத்திற்கு ஈடாக அமைக்காமல், தாழ்வாகவே ஊராட்சி நிர்வாகத்தினர் அமைத்து உள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால், பள்ளத் தெருவில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், கிராம மக்கள் அவ்வழியே செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால், தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே, பள்ளத்தெருவை உயரமாக அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.