கீழ்கதிர்பூர் வாரிய குடியிருப்பு மக்கள்... பரிதவிப்பு:போதிய வசதிகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிகுடியிருப்பில் போதிய வசதிகள் ஏற்படுத்தாததால், அங்கு வசிப்போர் சிரமப்படுகின்றனர். நகரில் இருந்து 8 கி.மீ., தள்ளி இருப்பதால், குடியிருப்பு பகுதிக்கு பேருந்து, மருத்துவமனை, பள்ளி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 33 பிளாக்குகளில் இரண்டு தளங்களுடன் 2,112 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. மொத்தம், 200 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீடுகளை, 2019ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். காஞ்சிபுரத்தில் பாயும் வேகவதி ஆற்றை ஆக்கிரமித்து வசிப்போருக்கும், பிற இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும், இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு பயன்பாட்டுக்கு வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், பேருந்து, மருத்துவமனை, பள்ளி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் இல்லாதது, அங்கு குடியிருப்போருக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கீழ்கதிர்பூர் குடியிருப்புகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கீடு இல்லை. அங்கு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பணியிடங்கள் இல்லை. குடியிருப்புகளை தாங்களே நிர்வகிக்கவும், பராமரிக்கவும், ஐந்து குடியிருப்பு சங்கங்களை, வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டது. ஆனால், அதில் ஒன்று மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. குப்பையை அவ்வப்போது எடுத்துச் செல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குடியிருப்பு அருகிலே 'டாஸ்மாக்' கடை இருப்பதால், அனைத்து வகையான குற்றங்களும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடக்கின்றன. பெண்கள், மாணவ - மாணவியர் அப்பகுதியில் நடக்கவே சிரமப்படுகின்றனர். குறிப்பாக, குடியேறாத சில வீடுகளில் மர்ம நபர்கள் சிலர் பயன்படுத்தி கஞ்சா புகைக்கின்றனர்; சீட்டு ஆடுகின்றனர்; அடிதடி சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளால், அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். காஞ்சிபுரம் நகரில் இருந்து 8 கி.மீ.,யில் குடியிருப்பு இருப்பதால், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என, குடியிருப்பு மக்கள் புலம் புகின்றனர். கீழ்கதிர்பூர் குடியிருப்பில் ஏற்கனவே நாங்கள் ரோந்து பணி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சூதாட்டம், மது அருந்தி தகராறு செய்வது போன்றவை குறித்து புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை வீட்டில் வசிப்போர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். - சங்கர்கணேஷ், டி.எஸ்.பி., காஞ்சிபுரம். குடியிருப்புகளுக்கு வெளிநபர்கள் எந்நேரமும் வந்து செல்கின்றனர். அடிதடி, கத்திக்குத்து சம்பவங்கள் நடப்பதால், பெண்கள் வசிக்கவே அச்சமடைகின்றனர். குப்பை, கொசு என அடிப்படை பிரச்னைகள் தீரவில்லை. மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்ற வசதிகளும் இல்லாதது சிரமமாக உள்ளது. - வி.சுபாஷ் சந்திரபோஸ், குடியிருப்புவாசி, கீழ்கதிர்பூர்.
எம்.எல்.ஏ., துவக்கிய
பஸ் சேவை இல்லை
காஞ்சிபுரத்திற்கு பேருந்து வசதியில்லை என, குடியிருப்போர் தரப்பில் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், போக்குவரத்து துறை சார்பில், காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து சேவையை, 2023ல், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் துவக்கி வைத்தார். ஆனால், இந்த பேருந்து வசதி சில மாதங்களிலேயே நின்றுவிட்டது. காலை, மாலை என இரு வேளைகளிலும் பணிக்கு செல்வோர், பேருந்து வசதியில்லாமல் சிரமப்படுகின்றனர் .
தீராத பிரச்னைகள்
குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார மையம் பயன்பாட்டிற்கு வரவில்லை வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில்லை குடியிருப்புகளை சுற்றிலும் பன்றிகள் மேய்கின்றன குடியிருப்புக்கு சுற்றுச்சுவரும், கண்காணிப்பு கேமராக்களும் இல்லை காஞ்சிபுரம் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லை குடியிருப்பு வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடம் செயல்பாட்டுக்கு வரவில்லை.