பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களால் ஆபத்து
குன்றத்துார்:வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையோரம் முடிச்சூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், குன்றத்துார், மலையம்பாக்கம் ஆகிய பகுதிகளில், ஏராளமான உணவங்கள் அமைந்துள்ளன.இதில், எந்த ஒரு உணவகமும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், இந்த சாலையில் செல்லும் கனரக வாகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களை வெளிவட்ட சாலையின் ஓரமும், அதன் சர்வீஸ் சாலைகளிலும் நிறுத்திவிட்டு சாப்பிட செல்கின்றனர்.அப்போது, அந்த வழியே செல்லும் மற்ற வாகனங்கள், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. 'பார்கிங்' வசதி இல்லாமல் செயல்படும் உணவகம் மீதும், சாலையோரம் வாகனங்களை நிறுத்தும் ஓட்டுனர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.