சாலையோரம் தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பையில் இருந்து, ஒரத்துார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியே, சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றன.இந்த சாலையில், பெரும் பகுதிகளில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த சாலையோரம் மின் கம்பங்களின் வழியே மின் ஒயர், மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், இவ்வழியாக செல்லும் பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் எதிர்பாராத விதமாக மின் ஒயரில் உரசும் போது, பெரும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயரை, உயர்த்தி அமைக்க, மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.