உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சடலம் அடக்கம் செய்ய இடம் கோரி சாலை மறியல்

சடலம் அடக்கம் செய்ய இடம் கோரி சாலை மறியல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்னேரி கிராமம். இக்கிராமத்தில், ஒட்டன்குடிசையில் வசிக்கும் மக்களுக்கான மயானம் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்நிலையில், ஒட்டன்குடிசையைச் சேர்ந்த மாரியம்மாள், 70, என்பவர் உடல்நிலை சரியின்றி நேற்று உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய அப்பகுதி மயானத்தில் செடி, கொடிகள் உள்ளிட்டவற்றை அகற்ற சிலர் முயன்றனர். அப்போது, மயானத்தின் அப்பகுதி தனக்கு சொந்தமானது எனவும், அப் பகுதியில் அடக்கம் செய்ய கூடாதென தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கான ஆக்கிரமிப்பை அகற்றவும், அங்கு சடலத்தை அடக்கம் செய்யவும் வலியுறுத்தி வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடத்தப்பட்டு, குறிப்பிட்ட அதே பகுதியில் சடலம் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி