கட்டுப்பட்டூர் ஏரிக்கரையோரம் சாலை போடும் பணி துவக்கம்
பரந்துார்:கட்டுப்பட்டூர் ஏரிக்கரையோரத்தில், சாலை போடும் பணிக்கு தடுப்பு சுவரை ஏற்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணியை, சாலை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் செய்து வருகிறது.காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில், காட்டுப்பட்டூர் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டி சிறுவாக்கம் - வரதாபுரம் - சாமந்திபுரம் சாலை செல்கிறது. இச்சாலை, பிரதமர் சாலைகள் மேம்பாட்டு நிதியில், 2.36 கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலை போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.சாலையோரம் இருக்கும் ஏரிக்கரை மண் கரைந்துவிடக்கூடாது என, திட்டமிட்டு ஒரு மீட்டர் உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த கரைகள் மீது இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, கரை பலப்படுத்தும் பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் செய்து வருகிறது.குறிப்பாக, ஏரிக்கரை மண் சரிந்து சாலையோரம் மற்றும் ஏரியில் விழுந்துவிடக்கூடாது என, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதேபோல, புத்தகரம், பரந்துார் உள்ளிட்ட ஏரிக்கரை சாலையோரங்களில் தடுப்பு ஏற்படுத்தினால், மழைக்காலங்களில் மண் சரிவினை தடுக்கவும், வாகன விபத்து தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.