வளைவு பகுதியில் சாலை சேதம் ஆற்பாக்கத்தில் விபத்து அபாயம்
ஆற்பாக்கம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டம், மாமண்டூர், சுருட்டல் செல்லும் சாலை உள்ளது. ஆற்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல் அரவை ஆலைகளில் இருந்து ஜல்லி, எம்-சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களால், ஆற்பாக்கம் கிராம சாலை வளைவு பகுதியில், சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், சாலை வளைவில் திரும்பும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, ஆற்பாக்கம் சாலை வளைவில், சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.