உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதுாரில் சாலை பாதுகாப்பு....இல்லை; தொடரும் உயிர்பலி

தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதுாரில் சாலை பாதுகாப்பு....இல்லை; தொடரும் உயிர்பலி

ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்குகிறது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் வடகால், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோடை ஆகிய ஐந்து சிப்காட் தொழில் பூங்காவில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், மருத்துவ சாதனங்கள் பூங்கா, வானுார்தி பூங்கா போன்றவையும் ஒரகடத்தில் சமீபத்தில் அமைந்துள்ளது.இதில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வாயிலாக, ஆண்டுக்கு 70,000 கோடி ரூபாய்க்கு மேல், உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்சாலைகள் இருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை உட்கட்டமைப்பு வசதியோ, பாதுகாப்போ, விபத்தை குறைக்கும் நடவடிக்கையோ போதிய அளவில் இல்லை.இதன் காரணமாக, தினமும் ஏதாவது ஒரு பகுதியில் விபத்து ஏற்படுவதும், அதனால் பலர் காயமடைந்து உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இங்கு உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி கொண்டு, தினமும் பல ஆயிரம் கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்காக ஊழியர்கள் பைக், கார், அரசு மற்றும் தனியார் பேருந்து, தொழிற்சாலை பேருந்துகளில் சென்று வருகின்றனர்.ஆனால், ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நெரிசல் மற்றும் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வேலைக்கு செல்வோர் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்தாண்டு மட்டும் 1,107 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், 336 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த எண்ணிக்கையில், 50 சதவீதம் ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் போன்ற பகுதிகளை சுற்றி நடந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பெறுத்தவரையில், கடந்தாண்டு நடந்த விபத்து சம்பவங்களை போலீசார் ஆய்வு செய்ததில், 25 இடங்கள் கண்டறிந்துள்ளனர்.அதில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம் சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் சாலையில் வல்லம் சந்திப்பு, வாலாஜாபாத் சாலையில் வைப்பூர் சந்திப்பு, ராஜிவ்காந்தி நினைவகம் சந்திப்பு, ஸ்ரீபெரும்புதுார் சத்தியம் கிராண்டு சந்திப்பு ஆகிய இடங்கள் அதிக விபத்து ஏற்படும் இடங்களாக உள்ளன.தமிழகத்தில் தொழில் துவங்கும் முக்கிய இடமாகவும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பகுதியாக உள்ள ஸ்ரீபெரும்புதுாரில், விபத்து மற்றும் வாகன நெரிசலை குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் கோட்டத்தில் சமீபத்தில் நடந்த விபத்துக்கள்:* ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து காவலர் முத்துகுமரன், 40, கடந்தாண்டு மார்ச் 23ல், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி நினைவிடம் சந்திப்பில் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது, லாரி மோதி உயிரிழந்தார்.* 2024 நவ., 24ல் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் வைப்பூர் சந்திப்பில், அரசு தொழிற்சாலை பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.* டிச., 9ம் தேதி சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம் சத்திப்பில், 'யு -- டர்ன்' எடுத்த தொழிற்சாலை பேருந்து மீது, லாரி மோதியத்தில் 10 பேர் காயமடைந்தனர்.* ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஜன., 13ல், வல்லம் சந்திப்பை கடந்த பூசாரி ராகவன், 76, அதிவேகமாக வந்த தொழிற்சாலை வேன் மோதியதில் உயிரிழந்தார். இதனால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சந்திப்புகளில், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து இடங்களிலும் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 'பிளிங்கர்' எனப்படும் ஒளிரும் சிக்னல் பொருத்தப்பட்டு வருகின்றன. தவிர, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சேதமான பகுதிகளில் சாலையை சீரமைக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அளித்துள்ளோம்.- ரவி,போக்குவரத்து இன்ஸ்பெக்டர்,ஸ்ரீபெரும்புதுார்.ஸ்ரீபெரும்புதுாரில் சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. பல்லாங்குழியான சாலைகளாலேயே பெரும்பாலும் விபத்து மற்றம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலை படுமோசமாக உள்ளது. இதுகுறித்து, முதல்வர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.- கு.பாஸ்கர்,மணவாளநகர்.

செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:

* விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு தானியங்கி அபராதம் விதிக்கும் அதிநவீன கேமரா அமைக்க வேண்டும்* முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்* குன்றத்துார், சிங்கபெருமாள் கோவில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் ஸ்ரீபெரும்புதுாரில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்* சத்தியம் கிராண்டு சந்திப்பில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்* நெடுஞ்சாலையோரம் நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்* தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியரை ஏற்றுவதற்கு தனிப்பாதை அமைக்க வேண்டும்* வல்லம் சந்திப்பில் உள்ள சிக்னலில், சாலையை கடக்கும் வாகனங்களுக்கு அதிகம் நேரம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உள்ளதால், சிக்னல் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி