தென்சென்னையில் ரூ.87 கோடி வெள்ள தடுப்பு திட்டம்.. கிடப்பில்! ஒரத்துார், ஆரம்பாக்கம் புதிய நீர்த்தேக்க பணியும் இழுபறி
குன்றத்துார்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில், குன்றத்துார் அருகே ஒரத்துார், ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம், ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தென்சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையிலான, வரதராஜபுரம் தடுப்பணை, அமரம்பேடு ஆற்றுப்படுகை பணிகள் என, 87.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை அரசு கிடப்பில் போட்டுவிட்டதால், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் துவங்கும் அடையாற்றின் கிளையாறு, வரதராஜபுரம் பகுதியில் இணைகிறது. இங்கிருந்து, புறநகர் மற்றும் சென்னையில், 42 கி.மீ., அடையாறில் பாய்ந்தோடி, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரால், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர் வெள்ள பாதிப்பில் சிக்குவது, ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது. இதனால், வெள்ள பாதிப்பை குறைப்பதற்கும், சென்னையின் எதிர்கால குடிநீரை தேவையை பூர்த்தி செய்யவும், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்காக, நீர்வளத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில், அடையாறு ஆற்றின் துவக்க பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க, குன்றத்துார் அருகே வரதராஜபுரம், சோமங்கலம், ஒரத்துார் ஆகிய மூன்று பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் தடுப்பணை அமைக்கும் இடங்களை கண்டறிந்தனர். ரூ.60 கோடி ஒதுக்கீடு ஒரத்துாரில் துவங்கும் அடையாறு கிளையாற்றில், இருபுறமும் உள்ள ஒரத்துார் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கமாக மாற்ற முடிவானது. இப்பணிக்காக, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கும் வகையிலான பணி, 2019ல் துவங்கியது. அதேபோல், வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரி, முடிச்சூர் தாங்கல் ஏரியை இணைத்து, அடையாறு கால்வாயில் தடுப்பணை கட்ட, 2020ல் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, வரதராஜபுரம் ஏரியையும், அடையாறு கால்வாயையும் இணைத்து, 11 கோடி ரூபாய் மதிப்பில் ஷட்டர்களுடன் கூடிய, 12 கண் மதகு கட்டப்பட்டது. அதேபோல், சோமங்கலம் அருகே துவங்கும் அடையாறு கிளை ஆற்றில் நடுவீரப்பட்டு- மணிமங்கலம் சாலையில் ஆற்றின் குறுக்கே, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், பாலத்துடன் கூடிய தடுப்பணை, 2020ல் கட்டப்பட்டது. இழுத்தடிப்பு மேலும், அதே ஆண்டு ஜூலையில், அமரம்பேடு அருகே, சோமங்கலம் கிளையாறு துவங்கும் இடத்தின் இருபுறமும் உள்ள அமரம்பேடு ஏரி, இரும்பேடு ஏரிகளை இணைத்து, 16.50 கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றுப்படுகை அணை அமைப்பதற்கான பணி துவங்கியது. இதில், சோமங்கலம் அருகே 4.50 கோடியில் பாலத்துடன் கூடிய தடுப்பணை பணி மட்டும் முழு அளவில் முடிந்துள்ளது. இங்கு ஆண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; விவசாயிகள் பயனடைகின்றனர். ஆனால், ஒரத்துார் நீர்தேக்கம் பணிகள், வரதராஜபுரம் தடுப்பணை மற்றும் அமரம்பேடு ஆற்றுப்படுகை அணை என, 87.50 கோடி ரூபாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதால், வெள்ள நீரை தடுத்து நிறுத்த முடியாமல், வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. பருவமழை முடிந்த பின் பணிகள் துவங்கப்படும் வெள்ள தடுப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அமரம்பேடு ஆற்றுப்படுகை அணைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், மொத்தம் மூன்று பணிகள் அடங்கும். இதில், 7 கி.மீ., நீளத்திற்கு சோமங்கலம் கிளையாற்றை துார்வாரி ஆழப்படுத்தும் பணி முடிந்துள்ளது. வரதராஜபுரத்தில் அடையாறு கால்வாய் உடைப்பு ஏற்படுவதை தடுக்க, நான்கு இடங்களில் தாங்கு சுவர் அமைக்கும் பணி, 45 சதவீதம் முடிந்துள்ளன. அமரம்பேடு ஆற்றுப்படுகை அணை கட்டுமான பணி நடக்கும் இடத்தில், மழையால் மண் நெகிழும் தன்மையில் இருப்பதால், வாகனங்கள் மூலம் பொருட்களை அங்கு ஏற்றி செல்ல முடியவில்லை. அதனால், வடகிழக்கு பருவமழை முடிந்த பின், மார்ச் மாதத்திற்குள், ஆற்றுப்படுகை அணை கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் 420 மீட்டர் நீளத்திற்கு கரை அமைக்கும் பணிக்கு, 84 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை, வருவாய் துறையினர் தாமதம் செய்துவிட்டனர். தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரியில், ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். என்னதான் பிரச்னை? ஒரத்துார் நீர்த்தேக்கம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தின் 80 சதவீத பணிகள் ஓராண்டில் முடிக்கப்பட்டன. நீர்த்தேக்க கரையின் மொத்த நீளம் 2,875 மீட்டர். இதில், 420 மீட்டர் நீளத்திற்கு கரை அமைக்க, ஒரத்துாரில் 84 ஏக்கர் பட்டா நிலம் கையப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதன்பின், 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிலம் கையகப்படுத்த ஆர்வம் காட்டாததால், நான்கரை ஆண்டு களாக பணிகள் கிடப்பில் உள்ளன. வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரி, 133 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி முழுதும் ஆக்கிரமிப்பில் சிக்கி, 1,000க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், ஏரிக்கான அடையாளமே அங்கு இல்லை. ஆக்கிரமிப்பை அகற்றி, அங்கு வசிப்போருக்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் மாற்று இடம் வழங்க, 2020ல் அ.தி.மு.க., அரசு திட்டமிட்டது. ஆனால், தி.மு.க., அரசு வந்ததும், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல், 12 கண் மதகு வழியே மழைநீர் வீணாக வெளியேறி வருகிறது ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் துவங்கி செம்பரம்பாக்கம் ஏரியில் முடியும், 'சவுத்ரி' கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாய். இந்த கால்வாயில் செல்லும் வெள்ள நீரின் ஒரு பகுதி, அமரம்பேடு அருகே பிரிந்து, சோமங்கலம் அடையாறு கால்வாயில் கலக்கிறது. அமரம்பேடு ஏரி, இரும்பேடு ஏரிக்கு இடையே உள்ள கிளையாறு கால்வாயின் குறுக்கே 100 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்து, ஆற்றுப்படுகை அணை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை, ஜூலை 24ல் துவங்கியது. இப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தும், அமரம்பேடு ஆற்றுப்படுகை அணை கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழைக்கு முன் மழை பொழிவு இருந்ததால், ஆற்றுப்படுகை அணை கட்டுமான பணி மேற்கொள்ளவில்லை என அதிகாரிகள் சமாளிக்கின்றனர்.