பள்ளி கட்டுமான பணியால் அரைநாள் மட்டுமே வகுப்பு உத்திரமேரூரில் மாணவியர் கல்வி பாதிப்பு?
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டுமான பணியால், அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு வருகி றது. உத்திரமேரூரில், செயல் பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,200 மாணவியர் படித்து வருகின்றனர். பழுதடைந்து இருந்த பள்ளி கட்டடங்கள் கடந்தாண்டு இடித்து அகற்றப்பட்டன. அதற்கு, பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், பள்ளியில் போதுமான கட்டட வசதி இல்லாததால், அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்த, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஓராண்டாக 6, 8 வகுப்புகளுக்கு காலை முதல் மதியம் வரையும், 7, 9 வகுப்புகளுக்கு மதியம் முதல் மாலை வரையும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலை முதல் மாலை வரையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 6 - 9 வரை உள்ள வகுப்புகளுக்கு, அரைநாள் மட்டுமே பாடம் நடத்தப்படுவதால், மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், குறித்த நாட்களுக்குள் பாடம் நடத்தி முடிப்பதில் ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி கூறியதாவது: பள்ளியில் பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. போதிய வகுப்பறை இல்லாததால் மாணவியருக்கு அரைநாள் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்னும் மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, முழுநேர வகுப்புகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.