சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் ரயில்வே சாலையில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாலாஜாபாத், செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ரயில்வே சாலை வழியாக சென்று வருகின்றனர். இச்சாலையில், ராஜாஜி காய்கறி மார்க்கெட், திருமண மண்டபம், சினிமா தியேட்டர், டாஸ்மாக், பலசரக்கு மளிகை கடை, பழம், அரிசி மண்டி, உணவகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக, சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், எண்ணெய்கார தெருவிற்கு செல்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இச்சாலையில் நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.