செம்பரம்பாக்கம் நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பு
இருங்காட்டுக்கோட்டை:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாயான சவுத்ரி கால்வாய், ஸ்ரீபெரும்புதுார் ஏரியிலிருந்து துவங்கி, செம்பரம்பாக்கம் ஏரியில் முடிகிறது. இந்த கால்வாயில் இருங்காட்டுகோட்டை அருகே காட்டரம்பாக்கம், அமரபேடு, சோமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டாமல், கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், காட்டரம்பாக்கம் அருகே கால்வாய் முழுதும் கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீர் மழை காலத்தில் அடித்து செல்லப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் கலப்பதால் ஏரி நீர் மாசடைகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டாமல் பொது இடத்தில் கழிவுநீரை கொட்டும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.