வேகவதி ஆற்றில் கலந்து வரும் கழிவுநீர் சுகாதாரமற்ற குடிநீரால் தொற்று அபாயம்
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம், பெண்டை, புதுப்பேட்டை, நாய்க்கன்பேட்டை, திம்மையன்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வேகவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ளன. இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்கு, வில்லிவலம் சுற்றுவட்டார வேகவதி ஆற்று படுகையில் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் நகர் வழியாக பாய்ந்து வரும் வேகவதி ஆற்று தண்ணீரில், சமீபகாலமாக தொழிற்சாலைகளின் கழிவுநீர், தோல் மற்றும் ரசாயன கழிவுகள், உணவக கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுநீர் போன்றவை அதிகளவில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.இதனிடையே, வில்லிவலம் வேகவதி ஆற்று படுகையில், கடந்த ஆண்டுகளில் மணல் அள்ளியதால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பள்ளங்களில் வேகவதி ஆற்றில் வரும் மாசடைந்த சாக்கடை நீர் தேக்கமாகி குளம்போல் காட்சியளிக்கிறது.இதனால், அப்பகுதிகளில் எப்போதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு, வேகவதி ஆற்று வாயிலாக விநியோகிக்கும் குடிநீரும், தரமற்று சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை உள்ளதாக, அப்பகுதியினர் புலம்புகின்றனர்.மேலும், வேகவதி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், அருகே உள்ள பாலாற்றில் கலப்பதால், பாலாற்று தண்ணீரும் மாசடைந்து, உவர்ப்பாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சீயமங்கலம் கிராமவாசிகள் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் இருந்து அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை வழியாக வேகவதி ஆற்றில் வரும் தண்ணீர், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் அருகே பாலாற்றில் கலக்கிறது.சீயமங்கலம் மற்றும் திம்மராஜம்பேட்டை, தாங்கி, பூசிவாக்கம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பல ஆண்டுகளாகவே பாலாற்று குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இதற்கு முன் பாலாற்று குடிநீர் சுவை இருக்கும்.ஆனால், வேகவதி ஆற்று வழியாக வரும் கழிவுகள் கலந்த தண்ணீரால், பாலாற்று குடிநீரில் முன் இருந்த சுவை இல்லாமல், துர்நாற்றம் வீசி வருவதோடு, குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பாலாற்று நீர் மற்றும் மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், வேகவதி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.