சாக்கடை அடைப்பால் வீட்டிற்குள் கழிவுநீர் தேக்கம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம், லாலா குட்டை, மாகாளியம்மன், பொய்யாகுளம் நேதாஜி தெருவில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில், 'ரிடர்ன்' ஆகும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் 23வது வார்டு பகுதிவாசிகள் சிலர் கூறியதாவது: பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், 10 நாட்களாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குளிக்கவும், இயற்கை உபாதை கழிக்க பக்கத்து வார்டில் உள்ள உறவினர், நண்பர்கள், மாநகராட்சி பொது கழிப்பறையை நாட வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர், வரதராஜபுரம், லாலா குட்டை, மாகாளியம்மன், பொய்யாகுளம் நேதாஜி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.