சிற்றுந்து சேவை 29 வழித்தடங்களில்... துவங்கியது 25 கி.மீ., துாரம் வரை இயக்க உத்தரவு
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 29 வழித்தடங்களில், தனியார் சிற்றுந்து சேவையை, அமைச்சர் காந்தி நேற்று துவக்கி வைத்தார். கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காக, 25 கி.மீ., துாரம் வரை நீட்டித்து, சிற்றுந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. :தமிழகம் முழுதும் சிற்றுந்து சேவையை, அரசு போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. தஞ்சாவூரில் நேற்று நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், சிற்றுந்து சேவைகளை துவக்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நேற்று நடந்த நிகழ்வில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, 29 வழித்தடங்களில் புதிய சிற்றுந்து சேவையை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் சிற்றுந்து உரிமையாளர்கள் என, பலரும் பங்கேற்றனர். புதிய வழித்தடம்
உத்திரமேரூர் நடுநிலைப் பள்ளி முதல், அங்கம்பாக்கம் கூட்ரோடு வரையும், கண்டிகை கூட்ரோடு முதல், புதுப்பேட்டை கூட்ரோடு வரையும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முதல், பாலுச்செட்டிச் சத்திரம் வரையும் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் ஆர்ச் முதல், அமரம்பேடு கூட்ரோடு வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடங்களுக்கான சிற்றுந்து சேவைகள் துவக்கி வைக்கப்பட்டன.காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று புதிய வழித்தடங்களிலும், பயண துாரம் நீட்டிக்கப்பட்ட 17 வழித்தடங்களிலும் சிற்றுந்து இயக்கப்படுகிறது.அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு புதிய வழித்தடத்திலும், எட்டு நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களிலும் சிற்றுந்து இயக்கப்படுகின்றன.மொத்தம் நான்கு புதிய வழித்தடங்களிலும், 25 நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. அரசாணை
சிற்றுந்து சேவை முந்தைய ஆண்டுகளில் இருந்தபோது, 20 கி.மீ., துாரம் வரை இயக்கப்பட்டு வந்தது. இப்போது, கிராமப்புற மக்கள் பயன்பாட்டுக்காக 25 கி.மீ., துாரம் வரை நீட்டித்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், சிற்றுந்து இயங்கும் மொத்த துாரத்தில், 65 சதவீத சாலைகள், பிற வகையான பேருந்துகள் எவையும் இயங்காத பகுதிகளாகும். மீதமுள்ள 35 சதவீத பகுதிகள், அனைத்து வகையான பேருந்துகள் இயங்கும் பகுதியாக இருக்கும்.காஞ்சிபுரத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்று வழித்தடங்கள் என்பது, பொதுமக்கள் கோரிக்கை, போக்குவரத்து அலுவலர்களின் ஆய்வு போன்றவைக்கு பின் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.சிற்றுந்து கட்டணங்கள் பற்றி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், துாரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 சிற்றுந்துகள்
சென்னையில், முதல் முறையாக தனியார் சிற்றுந்து சேவை நேற்று துவங்கியது. வடசென்னையில், 33 வழித்தடங்கள்; தென் சென்னையில் 39 வழித்தடங்கள் என, 72 வழித்தடங்களில் தனியார் சிற்றுந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 11 சிற்றுந்துகளின் சேவையை துவக்கி வைத்தார்.
திருவள்ளூரில் 5 சிற்றுந்துகள்
திருவள்ளூர் மாவட்டத்தில், 49 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க, 76 பேருக்கு 'பர்மிட்' வழங்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று ஐந்து வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை, கலெக்டர் பிரதாப் முன்னிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், சிற்றுந்து சேவையை துவக்கி வைத்தார்.
11 சிற்றுந்துகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில், 50 தடங்களில் தனியார் சிற்றுந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் நேற்று சிற்றுந்து சேவை துவங்கியது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்ட கலெக்டர் அருண் ராஜ், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆகியோர், சிற்றுந்து சேவையை துவக்கி வைத்தனர்.