சேர்ப்பாக்கம் பச்சையம்மன் கோவிலுக்கு சிறப்பு பேருந்து இயக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் இருந்து, சேர்ப்பாக்கம் பச்சையம்மன் கோவிலுக்கு, ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்க, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.உத்திரமேரூர் தாலுகா, சேர்ப்பாக்கம் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. தற்போது, ஆடி மாதம் துவங்கி உள்ளதால், ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.அதில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், வாலாஜாபாத், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் முதலில் உத்திரமேரூருக்கு வருகின்றனர். பின் அங்கிருந்து, 12 கி.மீ., துாரமுள்ள சேர்ப்பாக்கம் கோவிலுக்கு செல்ல, நேரடி பேருந்து சேவை இல்லாமல் உள்ளது. இதனால், பக்தர்கள் வந்தவாசி செல்லும் பேருந்தை பிடித்து, தண்டரை கூட்டு சாலையில் இறங்கி, 4 கி.மீ., தூரம் நடந்து கோவிலுக்கு செல்கின்றனர்.அப்போது, முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, உத்திரமேரூரில் இருந்து, சேர்ப்பாக்கத்திற்கு, ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்க, போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.