கல்லுாரி அதிகாரி மீது மாணவி பாலியல் புகார்
குன்றத்துார்: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவி, குன்றத்துாரில் உள்ள மாதா பல் மருத்துவமனையின் விடுதியில் தங்கி, பல் மருத்துவம் படித்து வருகிறார். இவர், குன்றத்துார் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக, விடுதி பொறுப்பாளர் ஜான்சி வலியுறுத்தியதால், கல்லுாரி நிர்வாக அதிகாரி ராமமூர்த்தியை நேரில் சந்தித்தேன். அப்போது, அவர் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திற்கு என்னை அழைத்து சென்று, தன்னிடம் நெருங்கி பழகினால், உதவி செய்கிறேன் என கூறினார். மேலும், இதை பற்றி பிறரிடம் சொன்னால், மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார். நான் ஒரு மாணவி என்றும் பாராமல், அவரோடு 'அட்ஜஸ்ட்' செய்யுமாறு, தகாத வார்த்தையில் பேசி மிரட்டிய கல்லுாரி நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி மீதும், உடந்தையாக இருந்த ஜான்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதையடுத்து, குன்றத்துார் போலீசார் ராமமூர்த்தி மற்றும் ஜான்சி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.