காஞ்சிபுரத்தில் மார்கழி மாத குளிரிலும் மாணவ - மாணவியர் பஜனையில் ஆர்வம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாமல், பள்ளி மாணவ - மாணவியர் ஆர்வத்துடன், பஜனை பாடல்களை பாடியபடி, வீதியுலா சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக மார்கழி மாதத்தில், பள்ளி மாணவ - மாணவியர் பஜனை பாடல்களை பாடியபடி வீதியுலாவாக, கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, மார்கழி மாத முதல் நாளான நேற்று, மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். இதுகுறித்து, பஜனை குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: கடந்த 100 ஆண்டு களுக்கு மேலாக மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடந்து வருகிறது. பஜனையில் ஈடுபடும் மாணவ - மாணவியர் மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து நீராடி, காலை 5:30 மணிக்கு, புத்தேரி தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒன்று சேருவர். புத்தேரி தெரு, சுப்பிர மணிய சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வீதியுலாவாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் உள்ளிட்ட வற்றை பஜனையாக பாடியபடி வீதியுலாவாக, கச்சபேஸ்வரர் கோவிலுக்கு செல்வர். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு உட்பிரகாரம், வெளிபிரகாரத்தை வலம் வந்து, பின், மீண்டும் புத்தேரி தெரு சுப்பிரமணிய சுவாமி கோவிலை வந்தடைவர். சுவாமிக்கு, அபிஷேகம் மற்றும் தீபாராதனை முடிந்தபின், வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் நேற்று, 55 பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வு முடிந்ததும், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பஜனையில் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.