உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் கழிவுநீர் கொட்டி டேங்கர் லாரிகள் அடாவடி

சாலையோரம் கழிவுநீர் கொட்டி டேங்கர் லாரிகள் அடாவடி

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கொட்டும், தனியார் டேங்கர் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நிலம் வாங்கி வீடு கட்டுவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து உள்ளது, இந்த நிலையில், இங்குள்ள தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகள் வாயிலாக கழிவுநீர் அகற்றப் பட்டு வருகிறது. டேங்கர் லாரிகளில் எடுக்கப் படும் கழிவுநீர், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படுகிறது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம், மாத்துார், வல்லக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் தொற்று நோய் பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, திறந்தவெளி மற்றும் சாலையோரங்களில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கவும், கழிவுநீர் லாரிகளை கண்காணிக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ