கனரக வாகனங்களால் தார் சாலை சேதம்
ஸ்ரீபெரும்புதுார்:தெரேசாபுரத்தில் இருந்து, தத்தனுார் வழியாக குண்டுபெரும்பேடு செல்லும் சாலையில், கனரக வாகனங்கள் சென்று வருவதால், சேதமடைந்து உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, தத்தனுார் வழியாக, குண்டுபெரும்பேடு செல்லும் தார் சாலை உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர், இந்த சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். குண்டுபெரும்பேடு ஏரி துார்வாரும் பணிக்காக, கனரக லாரிகள் அதிக அளவில் சென்று வந்ததால், இந்த சாலை சேதமடைந்து உள்ளது. அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால், கண்ணந்தாங்கல் பகுதியில் தார் சாலை பெயர்ந்து காணப்படுவதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவே சமனற்ற பகுதிகளால் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சேதமடைந்துள்ள சாலையில் செல்லும் போது, நிலைத்தடுமாறி இடறி விழுந்து காயமடைந்து வருவது, தொடர் கதையாக உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள குண்டுபெரும்பேடு சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.