ஜவுளிக்கடை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு
வாலாஜாபாத், வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில், ஜவுளிக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் 64. இவர், வாலாஜாபாத் ராஜ வீதியில் 'குருசாமி முதலியார் சன்' என்கிற பெயரில் நீண்ட காலமாக ஜவுளிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, குணசேகரன், 'ஹூரோ ஹோண்டா' இருசக்கர வாகனம் மூலம் ஜவுளிக்கடையில் இருந்து தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில், வெண்குடி அருகே சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குணசேகரன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.