உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிரம்பி வழியும் சிலாம்பாக்கம் அணைக்கட்டு 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி

நிரம்பி வழியும் சிலாம்பாக்கம் அணைக்கட்டு 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி

காஞ்சிபுரம்:சிலாம்பாக்கம் அணைக்கட்டு பணிகள் முழுதும் முடிந்த நிலையில், சில நாட்களாக பெய்த மழை காரணமாக, முதன்முறையாக அணைக்கட்டு நிரம்பி வழிவதால், 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட சிலாம்பாக்கம் கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு ஏற்படுத்த, நபார்டு திட்டத்தின் கீழ், 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைக்கட்டு பணிகள், 2023ல் துவங்கி, இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அணைக்கட்டு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், இன்னும் திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது. ஆற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் உயரம் கொண்டதாக அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், கட்டுமான பணிகள் தாமதமாகின. ஒரு வழியாக பணிகள் முடிந்து, அணைக்கட்டு தயாராக உள்ளது. இந்நிலையில், சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் நீர்வரத்து துவங்கி உள்ளது. செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டில் மழைநீர் தேங்கி, முழுமையாக நிரம்பி தற்போது வழிகிறது. இதனால், அணைக்கட்டு சுற்றி 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதோடு, 130 விவசாய கிணறுகளில், நீர்மட்டம் உயரும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை