காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாறு, வேகவதி ஆறு ஆகிய இரு முக்கிய ஆறுகளின் பராமரிப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. ஆற்றிலேயே குப்பை, மருத்துவ, கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், ஆற்றின் படுகை, மணல் போன்றவை நச்சுத்தன்மையாக மாறி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக பாயும் வேகவதி ஆறு, செய்யாறு, பாலாற்றை நம்பி லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆறுகளை நீர்வளத் துறையினர் முறையாக பராமரிக்காததால், பாலாறும், வேகவதியாறும் மோசமான நிலைக்கு மாறி வருகின்றன. வேகவதி ஆறு முறையான பராமரிப்பின் நாசமாகி வருகிறது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் சுற்றுவட்டார பகுதிகள், ஓரிக்கை, டெம்பிள் சிட்டி, தும்பவனம், சித்தி விநாயகர் பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தும், சாய ஆலைகளில் இருந்தும் நேரடியாக குழாய் பதித்து கழிவுநீர் நேரடியாக வேகவதி ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால், வேகவதி ஆறு மாசடைந்து வருகிறது. பிள்ளையார்பாளையம், திருப்பருத்திகுன்றம்,- கீழ்கதிர்பூர் இடையே செல்லும் வேகவதி ஆற்றில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது. இதில், கெட்டுப்போன உணவு, இறைச்சி மற்றும் மருத்துவ கழிவு கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக உள்ளதால், நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது. நிலத்தடிநீர் மாசுபடுவதால் விவசாயம் மற்றும் குடிநீரில் நச்சுத்தன்மை அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதேபோல பாலாற்றிலும் போதிய பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில், குப்பை கழிவுகளும், கட்டட கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. ஓரிக்கை, செவிலிமேடு போன்ற இடங்களில் மேம்பாலம் அருகே குப்பை கொட்டுவதால் பாலாற்றங்கரையோர பகுதியிலும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.
Galleryஇதுகுறித்து காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் குப்பை கொட்டக்கூடாது என, காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள ஊராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இருப்பினும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. ஆற்றில் குப்பை கொட்டாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். வேகவதி ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையாலும், மழைநீர் வடிகால்வாய் என்பற பெயரில் விடப்படும் கழிவுநீராலும் நிலத்தடி நீர் மாசு ஏற்படுகிறது. வேகவதி ஆற்றங்கரையோர பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால், அப்பகுதி மக்கள் ஆற்றில் குப்பையை கொட்டுகின்றனர். எனவே, கரையோர பகுதியில் போதுமான குப்பை தொட்டி அமைக்க வேண்டும். வேகவதி ஆற்றின் அகலத்தை முழுமையாக அளவீடு செய்து ஆக்ரமிப்புகளை அகற்றி, ஆற்றின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். - தி.மோகன், சமூக ஆர்வலர், காஞ்சிபுரம்.